Page Loader
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD 
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 16, 2023
07:12 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு படி, நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, 18-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்லா-கேப்புபாராவுக்கு இடையே கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

card 2

தமிழகத்திற்கு மழை 

இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 17- நவம்பர் 21ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.