'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி
கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார். மேகதாது அணை பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவின்(முக்கியமாக பெங்களூரின்) தண்ணீர் தேவையையும் மின்சார தேவையையும் பூர்த்தி செய்ய மேகதாது அணை அவசியம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. ஆனால், திமுக தலைமையிலான தமிழக அரசு இந்த அணையை கட்டவிட்டால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் சரியாக கிடைக்காது என்று கூறுகிறது. ஏற்கனவே, காவிரி ஆற்றின் இரண்டு கிளை நதிகளில் அணை கட்டப்பட்டுவிட்டது. இதற்கான முழு அதிகாரமும் கர்நாடகா கையில் இருக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒரு அணை கட்டவிட்டால், தடையின்றி பாய்ந்து கொண்டிருக்கும் காவிரி நீர் முழுவதும் கர்நாடாவின் அதிகாரத்திற்குள் வந்துவிடும்.
மேகதாது அணையை காட்டுவோம் என்று உறுதியளித்திருக்கும் கர்நாடக அரசு
அப்படி நடந்துவிட்டால், காவிரி நதியை மட்டுமே நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விசாயிகள் எப்போதும் கர்நாடகாவை நம்பி இருக்க வேண்டியதாகிவிடும் என்கின்றனர் தமிழக விசாயிகள். ஆனால், பெங்களூரின் தண்ணீர் தேவை மிகவும் அதிகரித்துவிட்டதால் அதற்கான தீர்வாக இந்த மேகதாது அணையை பார்க்கிறது கர்நாடகா. மேலும், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, மேகதாது அணை கட்டப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறி இருந்ததால், இதற்கான நடவடிக்கையில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், மேகதாது திட்டத்தை தமிழக அரசு முறியடிக்கும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும் என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.