Page Loader
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை உயர்வு

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2024
12:05 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவின் வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 344ஐ எட்டியுள்ளது. கேரள அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு, மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ஆழமான தேடுதல் ரேடார்களை அனுப்புமாறு கேரள அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவில் இருந்து ஒரு Xaver ரேடார் மற்றும் டெல்லியில் உள்ள திரங்கா மலை மீட்பு குழுவின் நான்கு Reeco ரேடார்களும், மத்திய அரசின் உத்தரவின்பேரில் விமானப்படை விமானத்தில் வயநாட்டிற்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அனுப்பப்பட்டன. ஐந்தாவது நாளாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னும் 200 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

மீட்புப் பணி

வயநாடு மீட்புப் பணிகளை பார்வையிட மோகன்லால் வருகை தர உள்ளதாக தகவல்

1,300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் கனரக இயந்திரங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்களுடன் உயிர் பிழைத்தவர்களைத் தேடுகின்றனர். லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீட்புப் பணிகளை பார்வையிட சனிக்கிழமை வயநாடு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது மற்றும் அடக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு வழிகாட்டுதல்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது. வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு உடல் அல்லது உடல் உறுப்புக்கும் ஒரு அடையாள எண் ஒதுக்கப்பட வேண்டும். இதற்கிடையில், வயநாட்டில் உள்ள 13 கிராமங்கள் உட்பட ஆறு மாநிலங்களில் உள்ள 56,800 சதுர கிலோமீட்டர் மேற்குத் தொடர்ச்சி மலைகள், சுற்றுச்சூழல் உணர்வுப் பகுதியாக (ESA) மத்திய அரசு அறிவித்துள்ளது.