நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்
செய்தி முன்னோட்டம்
குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான விஜேந்தர் சிங், பாஜகவில் இணைந்தார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத நேரத்தில், விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சிலிருந்து வெளியேறி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.
பாஜகவில் சேருவதற்கு ஒருநாள் முன்பு வரைக்கும், விஜேந்தர், பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்வீட் ஒன்றை ரீட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 31 அன்று கூட, லோக்சபா தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" மூலம் வெற்றி பெற்று அரசியலமைப்பை மாற்ற பிரதமர் மோடி விரும்புகிறார் என்று குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தியின் ட்வீட்டை விஜேந்தர் சிங் ரீட்வீட் செய்திருந்தார்.
தற்போது திடீரென ஓவர் நைட்டில் பல்டி அடித்து கட்சி தாவியிருப்பது, பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
தேசத்தின் நலன்
கட்சி தாவலுக்கு விஜேந்தர் கூறிய காரணம் என்ன?
காங்கிரஸில் இருந்து விலகிய உடனேயே, விஜேந்தர் சிங்,"தேசத்தின் நலனுக்காகவும், மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் நான் பாஜகவில் இணைந்தேன். மேலும் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்று கூறினார்.
பாஜகவுக்கு எதிரான சமீபத்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து கேட்டபோது,"நான் தொடர்ந்து தவறை தவறு என்றும், சரியை, சரியானது என்றும் அழைப்பேன். மேலும் விளையாட்டு வீரர்களை வலுப்படுத்த பாடுபடுவேன்" என்றார்.
விஜேந்தர் சிங் கடந்த 2019 காங்கிரஸில் சேர்ந்ததன் மூலம் அரசியலில் இறங்கினார்.
பின்னர் அவர், 2019 மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லியிலிருந்து போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியடைந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹரியானாவின் கர்னாலில் நடந்த பாரத் ஜோடோ யாத்ராவின் போது ராகுல் காந்தியுடன் விஜேந்தர் சிங்கும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.