'கலைஞர் 100' நிகழ்ச்சி நடைபெறும் இடம் திடீரென மாற்றம்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முதல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு முழுவதும் திமுக கட்சியினர் சார்பில் இந்த விழா கொண்டாடப்படும் என்று அறிவிப்பும் முன்னதாகவே வெளியாகியது. இதனிடையே, தமிழ் சினிமா உலகம் சார்பிலும் 'கலைஞர் 100' நிகழ்ச்சி நடத்தப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவினை மிக பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்ட நிலையில், ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து தரப்பு நடிகர்-நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், 'கலைஞர் 100' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதன்படி, அனைத்து திரைத்துறை சங்கங்கள் சார்பில் டிச.,24ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த 'கலைஞர் 100' விழா ஒத்திவைக்கப்பட்டது.
ரஞ்சி போட்டிக்கு சேப்பாக்கம் மைதானத்தினை தயார் படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் மாற்றம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த விழாவானது வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி தற்போது கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஞ்சி போட்டிக்கு சேப்பாக்கம் மைதானத்தினை தயார் படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.