LOADING...
கேரளாவின் புதிய முதல்வர் வி.டி. சதீசன்! 10 நாள் இழுபறிக்கு பின் காங்கிரஸ் அறிவிப்பு
கேரள முதலமைச்சராக வி.டி. சதீசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது

கேரளாவின் புதிய முதல்வர் வி.டி. சதீசன்! 10 நாள் இழுபறிக்கு பின் காங்கிரஸ் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 14, 2026
12:22 pm

செய்தி முன்னோட்டம்

கேரள அரசியலில் நிலவி வந்த பத்து நாள் நீணட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் மேலிடம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மே 4-ம் தேதி வெளியான கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), இடதுசாரிகளின் பத்தாண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட இழுபறி காரணமாகப் புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) கேரள மாநிலப் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி, டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

விவரங்கள்

பரிசீலிக்கப்பட்ட மற்ற பெயர்கள்

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் வி.டி. சதீசனுடன் கே.சி. வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நடத்திய தீவிர ஆலோசனையின் முடிவில், இளம் மற்றும் துடிப்பான தலைவரான சதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே புதிய அரசுகள் பதவியேற்ற நிலையில், கேரளாவில் நிலவிய தாமதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், கட்சியின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தலைவர்களையும் சமரசம் செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

விவரங்கள்

யார் இந்த வி.டி. சதீசன்?

தற்போது எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வந்த வி.டி. சதீசன், சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராகத் தனது ஆக்கப்பூர்வமான வாதங்களால் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவர். தூய்மையான மற்றும் நேர்மையான அரசியல்வாதி என்ற நற்பெயர் கொண்டவர். கேரளாவில் புதிய சகாப்தத்தைத் தொடங்கவுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான அமைச்சரவை விரைவில் பதவியேற்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தேதி இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement