Loading...
இன்னும் ஒரு மாதத்திற்குத்தான் தண்ணீர் வரும்? வைகை அணை வறண்டதால் 5 மாவட்டங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
வைகை அணை வறண்டதால் 5 மாவட்டங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

இன்னும் ஒரு மாதத்திற்குத்தான் தண்ணீர் வரும்? வைகை அணை வறண்டதால் 5 மாவட்டங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
01:00 pm

செய்தி முன்னோட்டம்

பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்ததன் காரணமாக உலகம் முழுவதும் கடுமையான எல் நினோ வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டின் காவிரி மற்றும் வைகை ஆற்றுப் படுகைகள் வறண்டு வருகின்றன. குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வரும் சூழலில், இதனை நம்பியுள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

நீர்வரத்து இல்லை

நீர்வரத்து இன்றி முடங்கிய வைகை மற்றும் முல்லைப்பெரியாறு

வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு, மேகமலை மற்றும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோயுள்ளது.

கடந்த மே மாதத்தில் அணையின் நீர்மட்டம் 20.51 அடியாகக் குறைந்து முற்றிலும் வறண்ட நிலையில், முல்லைப்பெரியாற்றிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் ஓரளவு மீண்டது.

ஆனால் தற்போது கேரளாவிலும் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நிரம்பாமல் வைகைக்கான நீர்வெளியேற்றம் 400 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தேவை

இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்கும் அவலநிலை

தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 42.09 அடியாக உள்ளது.

அணையில் இருந்து ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் தேனி, மதுரை குடிநீர்த் தேவைகளுக்காகத் தினமும் விநாடிக்கு 82 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அணைக்கு புதிய நீர்வரத்து வராவிட்டால் தென் மாவட்டங்கள் வரலாற்றில் இல்லாத அளவு கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.

ADVERTISEMENT

 நீர்மட்ட நிலவரம் 

தேனி மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்ட நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து இல்லாத நிலையே காணப்படுகிறது.

152 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 117.35 அடி மட்டுமே நீர் உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையில் 42.09 அடியும், மஞ்சளாறு அணையில் 26.10 அடியும், சோத்துப்பாறை அணையில் 68.56 அடியும், சண்முகாநதி அணையில் 26.25 அடியும் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

வருசநாடு மற்றும் மேகமலைப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்தால் மட்டுமே வைகை அணையில் நீர் வரும் சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT