உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம்
உத்தரகாண்ட்: கடந்த 3 நாட்களாக சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் இன்று சுரங்கப்பாதைக்கு வெளியே போராட்டம் நடத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 200 மீட்டர் பரப்பளவின் மீது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கினர். அந்த தொழிலாளர்களை மீட்பதற்கு 70 மணிரத்திற்கும் மேலாக மீட்பு குழுக்கள் இடிந்து விழுந்த பாறைகளை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு துளையிட்டு வந்தன. ஆனால், நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவால், தோண்டப்பட்டிருந்த துளைகள் மூடப்பட்டு, துளையிடும் ட்ரில்லிங் இயந்திரமும் சேதமடைந்தது.
மீட்பு குழுக்களிடம் மாற்றுத் திட்டம் ஏதும் இல்லாததால் மக்கள் கோபம்
மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், புது டெல்லியில் இருந்து புதிய இயந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த இயந்திரங்கள் வந்து சேர்வதற்காக மீட்பு குழுக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், விபத்து நடந்த சுரங்கப்பாதைக்கு முன், பெரும் திரளாக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று துளையிடும் ட்ரில்லிங் இயந்திரங்கள் சேதமடைந்ததை சுட்டி காட்டியுள்ள போராட்டக்காரர்கள், மீட்பு குழுக்களிடம் மாற்றுத் திட்டம் ஏதும் இல்லை என்று கூறி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் குழாய்கள் மூலம் கீழே அனுப்பப்பட்டு வருகிறது.