ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மின்சாரம்; 30,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உ.பி. அரசு முடிவு
உத்தரப் பிரதேச அரசு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மேற்கூரை சோலார் பேனல்கள் பொருத்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைவதற்காக 30,000 இளைஞர்களுக்கு சூர்ய மித்ரா என்ற திட்டத்தின்கீழ் பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, மாவட்ட மையங்கள் மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) சூர்ய மித்ரா பயிற்சி அமர்வுகளை நடத்தி பயிற்சி அளிக்க உத்தரபிரதேச புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனாவின் ஒரு அங்கமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் ஒரு கோடி சோலார் கூரைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டம் என்றால் என்ன?
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா இலவச மின்சாரத் திட்டம், வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை நிறுவும் குடியிருப்பு வீடுகளுக்கு கணிசமான மானியங்களை வழங்குகிறது. இந்த திட்டம் ஆற்றல் நிலைத்தன்மைக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், மின்சார கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புகளுக்கு 40% மானியமாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 2 கிலோவாட் திறன் வரையிலான அமைப்புகளுக்கு செலவில் 60% மானியமாக வழங்கப்படுகிறது. தற்போதைய பெஞ்ச்மார்க் விகிதங்களின்படி, 1 கிலோவாட் சிஸ்டம் ₹30,000, 2 கிலோவாட் சிஸ்டம் ₹60,000 மற்றும் 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட சிஸ்டம் ₹78,000 மானியமாக கிடைக்கும்.