
எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
எல்லையில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால் மற்றும் துணை சிறப்பு டிஜி (மேற்கு) ஒய்.பி. குரானியா ஆகியோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களை தங்கள் மாநில பணிக்கு திரும்ப அனுப்பியுள்ளது.
தீவிரவாதம் தொடர்பான விவகாரங்களில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்குவது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, கடந்த 2019-ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும்கூட, இதுபோன்ற வெளிப்படையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தாக்குதல்
பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்
கடந்த இரண்டு மாதங்களில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் பதுங்கியிருந்து தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வுகளாகி விட்டன.
குறிப்பாக, நீண்ட காலமாக தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இல்லாமல் இருந்த பிர் பஞ்சலின் தெற்குப் பகுதிகளில் கூட தற்போது தீவிரவாத தாக்குதல் நடக்கின்றன.
அங்கு நடந்த சமீபத்திய தாக்குதல்களில் இரண்டு இராணுவ அதிகாரிகள் வீர மரணம் அடைந்தனர் மற்றும் இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
எல்லையை காவல் காத்து வரும் பிஎஸ்எஃப் மற்றும் இதர பாதுகாப்புப் படைகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதை சரியாக கையாளவில்லை என்பதன் அடிப்படையில், இருவரையும் பிஎஸ்எஃப் படையிலிருந்து மத்திய அரசு விடுவித்துள்ளதாகத் தெரிகிறது.