
"அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 29க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து துரித நடவடிக்கை எடுக்கதாக காரணத்திற்காக மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
எனினும் இது அரசின் மெத்தன போக்கே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
பாஜக மாவட்ட தலைவர் அண்ணாமலை இது பற்றி ஆளும் திமுக அரசை சாடிய நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனரும் நடிகருமான விஜய் இது பற்றிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
விஜயின் அறிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
— TVK Vijay (@tvkvijayhq) June 20, 2024
அரசை எதிர்த்து அறிக்கை
ஆளும் தமிழக அரசை எதிர்த்து நேரடியான அறிக்கை வெளியிட்டுள்ள விஜய்
இதுவரை தமிழக அரசையோ, மத்திய அரசையோ அதிகமாக கண்டிக்காமல் மேலோட்டமாக அறிக்கை வெளியிட்டு வந்த விஜய், இந்த விவகாரத்தில்,"கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது" என நேரடியாக தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், "இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையே நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என்பதையும் 2026 தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.