போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
போக்குவரத்து துறையில் அமல்படுத்த வேண்டிய 6 கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும், பொதுமக்களுக்கு இடையூறு ஆகா வண்ணம் பேருந்துகளை தொடர்ந்து இயக்குவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறினார். மறுபுறம், அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "போராடுவதற்கு உரிமை இல்லை என சொல்லவில்லை; பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பி, போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள்தான் எனவும், இந்த போராட்டம் முறையற்றது எனவும் கருத்து தெரிவித்தது.
வேலை நிறுத்தம் வாபஸ்
இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநல மனுவை விசாரித்த பிறகு, பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, பொங்கல் பண்டிகை முடியும் வரை, அதாவது ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.