இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம் அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம்.
கடந்த 1992ம் ஆண்டு கிட்டத்தட்ட 655 பேர் இக்கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
அவர்களுள் 400க்கும் மேற்பட்டோர் விவசாயம், வனம் உள்ளிட்டவைகளை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் என்று கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், 155 வனத்துறையினர், 6 வருவாய் துறையினர், 108 காவல்துறையினர் என மொத்தம் 269 பேர் 1992ம் ஆண்டு ஜூன் மாதம் 20 தேதி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதில் அங்கிருந்த ஏரி பகுதிகள் மற்றும் சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
கோரிக்கை
133 மலைவாழ் மக்கள் கைது
மேலும், 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த சோதனையின் போது, 18 மலைவாழ் இனத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும்,
கிராமமக்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதாகவும் அரூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகாரளித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் புகார்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் அப்போதைய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன் பின்னரே குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், உரிய விசாரணை இந்த வழக்கில் நடத்தப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் சிபிஐ-யிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.
தீர்ப்பு
1996ல் குற்றப்பத்திரிக்கையினை தாக்கல் செய்த சிபிஐ
அதன்படி இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாற்றப்பட்டது.
சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் சோதனையிட்ட 269 அதிகாரிகளும் குற்றம் செய்தது உறுதியான நிலையில் கைது செய்யப்பட்டனர்.
1996ல் இதுகுறித்து கோவை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், தருமபுரி முதன்மை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு 2008ல் மாற்றப்பட்டது என்று தெரிகிறது.
இதன் மீதான விசாரணையினை மேற்கொண்ட நீதிபதி குமரகுரு கடந்த 2011ம் ஆண்டு செப்.,29ம் தேதி தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
மேல்முறையீடு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தீர்ப்பின்படி, குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் அப்போது உயிருடன் இருந்த 215 குற்றவாளிகளுக்கு இத்தீர்ப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது அவர்களுள் 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ளவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே ஒரு வழக்கில் அதிகளவிலான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய வழக்காக இது இருந்ததால் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றவர்கள் சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி பி.வேல்முருகன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.
எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள இறுதி தீர்ப்பு
பின்னர், இந்த வழக்கின் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் செல்ல திட்டமிட்ட நீதிபதி பி.வேல்முருகன், கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி வாச்சாத்தி கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள மக்களை சந்தித்து அவர் பேசியுள்ளார் என்று தெரிகிறது.
அதேபோல் இந்த வழக்கில் தொடர்புள்ள இடங்களாக கூறப்படும் ஏரிப்பகுதி, தண்ணீர் தொட்டி, ஆலமரம், தொடக்கப்பள்ளி, மலைப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று(செப்.,29) வழங்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இதன் தீர்ப்பினை பலரும் எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.