ஜனநாயகக் கடமை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்களது வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்கான முக்கியமான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்க விரும்பும் ஒவ்வொருவரும், தங்களது தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும். இதற்காக தேர்தல் கமிஷனின் 'இ.சி.ஐ.நெட்' என்ற செயலியைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தற்போது ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 26) கடைசித் தேதியாகும். இறுதி நாளான இன்று விண்ணப்பிக்கத் தவறுபவர்கள், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எக்காரணம் கொண்டும் வாக்களிக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்
அடையாள அட்டை மட்டும் போதாது
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், எந்தவிதமான அடையாள அட்டையை வாக்குச்சாவடிக்குக் கொண்டு சென்றாலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இன்று விண்ணப்பிப்பவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் 'துணைப் பட்டியலில்' வெளியிடப்படும். இந்தத் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் மட்டுமே, அவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக கருதப்படுவார்கள். தமிழகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில் உங்கள் பங்களிப்பு மிக அவசியமானது. எனவே, தகுதியுள்ள இளைஞர்களும், பட்டியலில் பெயர் விடுபட்ட பொதுமக்களும் இந்த இறுதி நேரத்தைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.