மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 720க்கு 720 பெற்று நாமக்கல் மாணவர் சாதனை
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டார். இந்தாண்டு 1,52,920 மாணவர்கள் நீட் தேர்வினை எழுந்தினர், அதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஆண்டை விட தற்போது 150 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், கன்னியாகுமரியில் உள்ள மெடிக்கல் மிஷன் அண்ட் ரிசர்ச் செண்டர் கல்லூரியில் 100 மாணவர்களும் என மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளது." எனத்தெரிவித்தார்.
720 மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் மாணவர்
தொடர்ந்து பேசிய அமைச்சர்," நாமக்கலைச் சேர்ந்த ரஜினிஷ் என்ற மாணவன் 720 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் ரூபிகா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்" என்று கூறினார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு தமிழ்நாட்டில் வருகிற 21-ம் தேதி மருத்துவத் தேர்வுக்குழு மூலமாக நடத்தப்பட உள்ளது. அதில், முதல் 3 நாட்களில், 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும், முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, பொதுக் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது.