தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் அலர்ட்
செய்தி முன்னோட்டம்
கிழக்குத் திசைக் காற்று அலைகளின் தாக்கத்தால் தமிழகத்தில் நாளை நவம்பர் 23 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்து வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இப்போது மீண்டும் பருவமழை தீவிரமடைய உள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி நாளை கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மிதமான மழையும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும்
சென்னையைப் பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனமழை
நவம்பர் 24 முதல் 27 வரை சென்னை, தென் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை
நவம்பர் 24-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்பட பதினெட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
நவம்பர் 27 ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.