கடும் எதிர்ப்புக்குப் பின் பணிந்தது தமிழக அரசு: RTI விலக்கு அளிக்கப்பட்ட சர்ச்சை அரசாணை வாபஸ்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசின் பொது (சட்டம் - ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (RTI) இருந்து முழு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக கிளம்பிய கடுமையான எதிர்ப்புகளை தொடர்ந்து, திரும்பப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வெளியானதை தொடர்ந்து, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அலை வீசியது. "காவல்துறையின் அத்துமீறல்களையும் மனித உரிமை மீறல்களையும் மறைக்க அரசு முயல்கிறது" என விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர் அமைப்புகளும் எச்சரித்தன. இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து தற்போது அரசாணை திரும்பபெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாணை ரத்து
அரசாணை ரத்து: வெளிப்படைத்தன்மை நிலைநாட்டப்பட்டது
எதிர்ப்புகள் தீவிரமடைந்த நிலையிலும், இச்சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது எனச் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டிய நிலையிலும், முதலமைச்சர் மட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து அரசாணை எண் 57 உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சட்டம் - ஒழுங்குத் துறை மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) முழு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு, சாமானிய மக்களின் தகவல் அறியும் உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.