UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன?
யுபிஎஸ்சி ஆணையம் மத்திய அரசின் 45 பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு விளம்பரத்தை வெளியிட்டது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த நேரடி நியமன ஆட்சேர்ப்பு விளம்பரத்தை ரத்து செய்ய யு.பி.எஸ்.சி-க்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் மூலம் மகிழ்ச்சி தெரிவித்தார். இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார். "இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்து நேரடி நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்" என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சர் கடிதம்
இந்த விளம்பர விவகாரம் பலத்த எதிர்ப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக, யு.பி.எஸ்.சி தலைவி ப்ரீத்தி சுதனுக்கு நேற்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியிருந்தார். அதில், "அரசுப் பணிகளில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியானவர்கள் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற, சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது முக்கியம். சமூக நீதியை உறுதி செய்வதில் பிரதமர் கவனம் செலுத்தும் சூழலில் இந்த அம்சம் மறுபரிசீலனை செய்யப்பட்டு சீர்திருத்தப்பட வேண்டும்". " 17.8.2024 அன்று வெளியிடப்பட்ட லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தை ரத்து செய்யுமாறு யு.பி.எஸ்.சி.,யை நான் வலியுறுத்துகிறேன். இந்த நடவடிக்கையானது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.