"ராகுல் காந்தி வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால்...": மிமிக்ரி சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து
மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்த விவகாரத்தை, "சாதாரண அரசியல்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து, இன்று டெல்லியில் அவரிடம் கருத்து கேட்கப்பட்டபோது பானர்ஜி, "நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். இது அவமரியாதை பற்றியது அல்ல. இது சாதாரண அரசியல்... ராகுல் (காந்தி) செல்போனில் வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால் நீங்கள் வந்திருக்க மாட்டீர்கள். அதை பற்றி கூட தெரியும்" எனக்கூறினார். இரு தினங்களுக்கு முன்னர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கல்யாண் பானர்ஜி, நாடாளுமன்றத்திற்கு வெளியே ராஜ்யசபா தலைவரும், துணைத் ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரைப் போல மிமிக்ரி செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த நிகழ்வை தனது செல்போனில் படம் பிடித்ததற்காக ராகுல்காந்தியும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ஆளும்கட்சியினர் துணை ஜனாதிபதிக்கு ஆதரவு
அமளியில் ஈடுபட்டதற்காக, இரு அவைகளிலும் 100 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற படிக்கட்டுகளில் அமர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது தான் திரிணாமுல் காங்கிரஸ் MP துணை ஜனாதிபதியை கிண்டல் அடித்து மிமிக்கிரி செய்தார். இந்த செயல், அரசியல் சாசன பதவிகளுக்கு எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை இல்லை என்று பாஜக குற்றம்சாட்டியது. தன்னை கிண்டல் செய்ததற்காக, திரு தன்கர்"நீங்கள் ஜக்தீப் தங்கரை எவ்வளவு அவமானப்படுத்துகிறீர்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், இந்திய துணை ஜனாதிபதி, விவசாயிகள், எனது சமூகத்தை அவமதிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனது பதவியின் கண்ணியத்தைக் காக்க வேண்டும், இந்த மாளிகையின் கண்ணியத்தைக் காப்பது எனது கடமையாகும்" எனக்கூறினார்.