திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்ததாலேயே தீபம் ஏற்ற முடியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
செய்தி முன்னோட்டம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒருமுறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாதது குறித்து தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஆகம விதிகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு மரபுகளை மீறுவதாகக் கூறி கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்ததால், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள வழக்கமான தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகம விதிகள்
ஆகம விதிகளைச் சுட்டிக்காட்டிய கோயில் அறங்காவலர் குழு அறிக்கை
முன்னதாக, திருப்பரங்குன்றம் கோயில் இணை ஆணையர் வெளியிட்டிருந்த அறிக்கையில், மூலவரின் சிரசுக்கு நேர்மேலே உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் விளக்கேற்றுவதே காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்படும் ஆகம விதி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சர்ச்சைக்குரிய தீபத்தூண் என்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடப்பட்ட நில அளவைக் கல் எனக் கூறிய கோயில் நிர்வாகம், பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற அறங்காவலர் குழு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், இதுகுறித்த முழு விவரங்களும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனவும் விளக்கமளித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு
முறையான மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு வேண்டுமென்றே மீறிவிட்டதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அறங்காவலர் குழுவைப் பயன்படுத்தித் தீபம் ஏற்றுவதைத் தடுத்த அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டது.
ஆனால், தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர்கள் முறைப்படி மனு தாக்கல் செய்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி தொடர்ந்து இரண்டாவது நாளாக பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுப் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.