திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திருப்பம்: உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்
செய்தி முன்னோட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை மட்டும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த போதிலும், வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று பொதுமக்கள் கூட்டமின்றி மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை மேற்பார்வையில் ஒருமுறை மட்டும் தீபமேற்ற அனுமதி அளித்திருந்தது. மேலும் இதனை எதிர்கால உரிமையாக யாரும் கோர முடியாது எனக் கூறி விசாரணையை 2027 ஜனவரிக்கு ஒத்திவைத்திருந்தது.
ஆலோசனை
சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை
உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவிற்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கவலை தெரிவித்ததோடு, மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க மாநில அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தின.
மறுபுறம் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.
இத்தகைய பரபரப்பான சூழலில், சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
நாளைய விசாரணையில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு
கார்த்திகை தீபத் திருவிழா வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) நடைபெறவுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மலைக்குச் செல்லப் பொதுமக்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள இந்தச் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நாளைய தினம் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.