
சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது?
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் அவைகளை திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து கடந்த திங்கள்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'கடுமையான கவலையை' தெரிவித்ததோடு, அதிருப்தியையும் வெளிப்படுத்தியது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆளும் தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் இதே பிரச்சனை நிலவி வருகிறது.
இந்நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜஃடந்கவ்
அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா, ஆளுநரிடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டால், அவர் அதற்கு 4 விதமாக பதிலளிக்க அதிகாரம் இருக்கிறது என்கிறது இந்திய அரசியலமைப்பின் 200வது சட்டப்பிரிவு. அவை பின்வருமாறு,
1. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம்.
2. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கலாம். அதாவது மசோதாவை நிராகரிக்கலாம். அப்படி நிராகரித்தால் அந்த மசோதா சட்டம் ஆகாது.
3. மாநில சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்காக மசோதாவை(அது பணம் தொடர்பான மசோதாவாக இல்லாத பட்சத்தில்) திருப்பி அனுப்பலாம்.
4. குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக அந்த மசோதவைத் தனியாக ஒதுக்கி வைக்கலாம். ஆனால், ஒரு மசோதாவை நிராகரிக்க ஆளுநருக்கு நேரடி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறி இருக்கிறது.(முக்கியமாக, ஷம்ஷேர் சிங் வழக்கு (1974))
டிஜிவ்ன்
ஒரு மசோதாவை ஆளுநர் எப்போது நிராகரிக்கலாம்?
மாநில அமைச்சரவையின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு மசோதாவை ஆளுநர் நிராகரிக்கலாம்.
அமைச்சர் அல்லாத ஒரு சட்டமன்ற உறுப்பினரால் அறிமுகப்படுத்தப்படும் மசோதா தனிப்பட்ட உறுப்பினர்கள் மசோதா என்று அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு மசோதா ஒருவேளை ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டால், மேலும் அந்த மசோதாவை மாநில அமைச்சர்கள் சட்டமாக்க விரும்பவில்லை என்றால், அத்தகைய சந்தர்ப்பத்தில், 'ஒப்புதலை நிறுத்திவைக்குமாறு' அமைச்சர்கள் ஆளுநருக்கு அறிவுறுத்துவார்கள். அப்படி நடந்தால், ஆளுநர் அந்த மசோதாவை நிராகரிக்கலாம்.
இல்லையென்றால், கவிழ்க்கப்பட்ட முந்தைய அரசாங்கம் நிறைவேற்றிய ஒரு மசோதாவை, தற்போதைய அரசாங்கம் சட்டமாக்க விரும்பவில்லை என்றால், அமைச்சரவையின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு மசோதாவை ஆளுநர் நிராகரிக்கலாம்.
டக்ஜ்வ்க்
ஆளுநர் ஒரு மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு அதிகாரம் இருக்கிறதா?
மறுபரிசீலனைக்காக மாநில சட்டமன்றத்திற்கு ஒரு மசோதாவை திருப்பி அனுப்புவதாக இருந்தாலும் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே அதை ஒரு ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்.
எனினும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை தமிழக ஆளுநர் எப்படி திருப்பி அனுப்பினாரோ அது போலவே கடந்த காலங்களில் ஆளுநர்கள் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்தி மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.
அப்படி விருப்புரிமையைப் பயன்படுத்தி மசோதாக்களை திருப்பி அனுப்புவதாக இருந்தாலும், ஒருமுறை மட்டுமே திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
அதாவது, திருப்பி அனுப்பப்பட்ட அதே மசோதாவை மாநில சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றினால் அதை ஆளுநரால் நிராகரிக்க முடியாது.
இதனால் தான், சமீபத்தில் தமிழக அரசு ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியது.
ட்ஜ்வ்க்க்ள்
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒரு மசோதாவை ஆளுநர் எப்போது ஒதுக்குவார்?
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் மசோதாக்கள் போன்ற சில முக்கிய மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிரான மசோதாக்களை ஒரு மாநில அரசு நிறைவேற்றினாலும், அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கும் கட்டாயம் ஒரு ஆளுநருக்கு இருக்கிறது.
மேலும், மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவின் விதிகள் இந்திய அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக இருக்கிறது என்று ஆளுநர்கள் கருதினால், அப்படிப்பட்ட அரிதான சூழ்நிலைகளில் அவர்கள் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்தி,அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம்.
ஆனால், ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க அவருக்கு எந்தவொரு காலக்கெடுவையும் அரசியலமைப்பு வகுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.