புது டெல்லி: ஜி20 உச்சிமாநாட்டில் நடந்த மிக முக்கியமான 5 நிகழ்வுகள்
நேற்றும் இன்றும் புது டெல்லியில் வைத்து இந்த ஆண்டிற்கான ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிகழ்ந்த மிக முக்கியமான 5 நிகழ்வுகளை இப்போது பார்க்கலாம். ஜி20 அமைப்பு ஜி21 அமைப்பாக மாறியது ஆப்பிரிக்க ஒன்றியம்(AU), ஜி20 இன் புதிய நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்க யூனியன் என்பது 55 நாடுகளின் குழுவாகும். சர்வதேச வழித்தடம் அறிமுகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் ரயில்வே மற்றும் துறைமுக வசதிகளை இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் புதிய சர்வதேச வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.
டெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது
ஜி20 புதுடெல்லிப் பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தை நிலைநாட்டுமாறு நாடுகளுக்கு இந்த பிரகடனம் அழைப்பு விடுத்தது. ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான விஷயங்களும் இந்த டெல்லி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உலகளவில் பசுமை எரிபொருளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணியை இந்தியா உருவாக்கியிருக்கிறது. உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறை குறித்த தீர்மானம் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் "உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை" சமாளிக்க ஒரு வலுவான அழைப்பு விடுக்கப்பட்டது.