இந்தியா முதல் ஐரோப்பா வரை: சர்வதேச வழித்தடம் அறிமுகம்
மற்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக, இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் பிற உலகத் தலைவர்களும் இந்த வழித்தடத்தை இன்று தொடங்கி வைத்தனர். இந்த வழித்தடத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இது ஒரு புதிய திசையை கொடுக்கும் என்று கூறினார். "வரவிருக்கும் காலங்களில், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு இந்த வழித்தடம் ஒரு பயனுள்ள பாதையாக மாறும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சர்வதேச வழித்தடத்தினால் என்ன பலன் கிடைக்கும்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் ரயில்வே மற்றும் துறைமுக வசதிகளை இந்த வழித்தடம் இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க உள்ளது. இந்தத் திட்டத்தினால் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மும்பையிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் கப்பல் கொள்கலன்களை, எதிர்காலத்தில் துபாயிலிருந்து இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவிற்கு ரயில் மூலம் எடுத்து செல்ல முடியும்" என்று யூரேசியா குழுமத்தின் தெற்காசிய பயிற்சித் தலைவர் பிரமித் பால் சௌதுரி கூறியுள்ளார். இந்த கணிப்பு உண்மையாகி விட்டால், பணமும் நேரமும் மிச்சமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.