Page Loader
பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம்

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம்

எழுதியவர் Srinath r
Dec 17, 2023
03:36 pm

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை பூசாரியின் உடல் புதர்களுக்குள் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அவரது அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனோஜ் குமார்,32, என்ற பூசாரி திங்கட்கிழமை நள்ளிரவில் தானாபூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து வெளியேறிய போது, கடைசியாக பார்க்கப்பட்டார். மனோஜ் குமாரின் சகோதரரான அசோக் என்பவர், முன்னாள் பாஜக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. பூசாரி உடல் கண்டெடுக்கப்பட்டவுடன் அக்கிராமத்தில் கலவரம் வெடித்தது.

2nd card

கலவரத்தில் இரண்டு காவல்துறையினர் படுகாயம்

தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய கிராம மக்கள், கற்களால் தாக்கியதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்த நிலையில், காவல்துறை வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை அன்று மனோஜ் குமார் மாயமானதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். கோபால்கஞ்ச் சப்-டிவிஷனல் காவல் அதிகாரி பிரஞ்சல் கூறுகையில், கிராமத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க போதுமான வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கு குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டு, குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.