தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக
தெலுங்கானாவை ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, ஒரு தென் மாநிலத்தில் தனது ஆட்சியை விரிவுபடுத்த பாஜக முயற்சித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையில், இன்னொரு தென் மாநிலத்திலும் தனது கால்தடத்தை பாதிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. தெலுங்கானாவில் இரண்டு முறை முதலமைச்சராக இருந்த கே.சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி, சமூக நலத் திட்டங்களால் மக்களின் மனதை கவர்ந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறது. 2014இல் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தை நிறுவியது பிஆர்எஸ் கட்சியாகும். எனவே, அதற்கான விசுவாசத்தையும் மக்கள் இந்த தேர்தலில் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் பிஆர்எஸ் உள்ளது.
எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேரும்?
இந்நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெரும்பான்மையை பெற்று சமீபத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், அதன் புதிய இளம் தலைவர் ரேவந்த் ரெட்டியின் தலைமையில் தெலுங்கானாவிலும் வென்று விட வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது. பிஆர்எஸ் தலைவரும் தெலுங்கானாவின் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் கட்சி மீது பாஜக தலைமையிலான மத்திய அரசு பெரும் ஊழல் புகார்களை முன்வைத்திருக்கிறது. ஆனால், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதாவின் பெயர் இருந்தபோதிலும், அவர் கைது செய்யப்படாததை சுட்டி காட்டி இருக்கும் காங்கிரஸ், பாஜகவும் பிஆர்எஸும் கூட்டணி சேர்ந்து கொண்டு சதி செய்வதாக தெரிவித்திருந்தது. அதனால், ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேரும் என்பதும் பெரும் புதிராகவே உள்ளது.