ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அவருடன் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், அவரது மகன் நாரா லோகேஷ் உட்பட 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விஜயவாடாவின் கேசரப்பள்ளி ஐடி பூங்காவில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அம்மாநில ஆளுநர், சந்திரபாபு நாயுடுவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங், NDA கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆந்திராவின் முதல்வராக நான்காவது முறையாகசந்திரபாபு நாயுடு
அதுபோக, நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபாலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பவன் கல்யாணின் மூத்த சகோதரரான மெகாஸ்டார் சிரஞ்சீவி, நடிகர்கள் ராம் சரண், அல்லு அர்ஜுன், மோகன் பாபு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சந்திரபாபு நாயுடுவின் மருமகன் ஜூனியர் என்டிஆரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்றுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த மாநில தேர்தல்களில், நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. 175 சட்டமன்ற தொகுதிகளில் 135 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான ஜனசேனா மற்றும் பாஜக முறையே 21 மற்றும் 8 இடங்களில் வெற்றி பெற்றன.