Page Loader
தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை
தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 25, 2024
08:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி வாகனங்களின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.150 வரை பயணத்திற்கான கட்டணம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008இன் படியே இந்த சுங்கச் சாவடி கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

கட்டண உயர்வு

5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் 67 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், அவற்றில் 25 சுங்கச்சாவடிகளில் மட்டும் தற்போது கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறினர். மேலும், சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு என்பது அனைத்து வகை வாகனங்களுக்கும் 5 முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.4,221 கோடி வசூலிக்கபப்ட்டுள்ளது. இதன் மூலம் சுங்கக் கட்டண வசூலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேசம், இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிரா, நான்காவது இடத்தில் குஜராத் ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.