தமிழ் புத்தாண்டை எப்போது கொண்டாடுவது; தை மாதமா? சித்திரை மாதமா? -பாகம் 2
1972ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, திருவள்ளுவர் ஆண்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி, தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்க நினைத்தார். "ஆரியர்களால் உருவான புத்தாண்டை விடுத்து, தமிழர்களின் நாளை புத்தாண்டாக அறிவிக்க" அவர் விரும்பினார். 2006ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பதிவியேற்ற கருணாநிதி தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து அரசாணையையும் வெளியிட்டார். ஆனால், அதற்கு அடுத்த தேர்தலில் வெற்றிபெற்ற அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுகவின் புத்தாண்டு அறிவிப்பை புறக்கணித்து, சித்திரை முதல் நாளை மீண்டும் புத்தாண்டாக அறிவித்தார். இப்படி ஒவ்வொரு முறையும் இரு கட்சிகளும் மாறிமாறி வெற்றி பெற்ற போது புத்தாண்டு தேதியும் மாற்றப்பட்டது. அதுவே நமக்கு இருக்கும் இந்த பெரிய குழப்பத்திற்கு காரணம்.
வரலாற்றில் தமிழ் புத்தாண்டு
தமிழ் பேசும் மக்கள் மட்டுமின்றி வங்காளம், அசாம், ஒடிசா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்களும், இலங்கை தமிழர்களும், சிங்களர்களும், பர்மா, கம்போடியா, லாவோஸ், வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாட்டை சேர்ந்தவர்களும் சித்திரை மாதத்தில் தான் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். ஆங்கில புத்தாண்டு மட்டுமே தை மாதத்தை ஒட்டிய ஜனவரி மாதத்தில் வருகிறது. ஆங்கில புத்தாண்டின் தேதியும் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மேற்கத்திய அரசர் ஒருவரால் வேண்டுமென்றே மாற்றப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் நாளையே புத்தாண்டு என்று ஜோதிடம் கூறுகிறது. அது சித்திரை முதல் நாளில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறும் அரசியலும்
ஆனால், தமிழ் ஜோதிடத்திலும் சமஸ்கிருத்தின் உபயோகம் இருக்கிறது. எனவே அதுவும் ஆரியர்களின் ஆட்சிகளுக்கு பின் மாற்றப்பட்டது என்றே வைத்து கொள்ளலாம். அப்படி பார்த்தால், நாம் படிக்கும் வரலாறு எதுவுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மன்னரும் ஒவ்வொரு ஆட்சியும் மாறும் போது அவர்களுக்கு ஏற்றவாறு ஆட்சி மொழியும் மதமும் இலக்கியமும் கல்வெட்டுகளும் மாற்றப்பட்டிருக்க்கூடும். திமுகவும் அதிமுகவும் தங்களது ஆட்சிக்கு ஏற்றவாறு எப்படி புத்தாண்டு தினத்தையே மாற்றினார்களோ. அதே போல் வரலாற்றிலும் நாம் அறியாத பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். இம்சை அரசன் திரைப்படத்தில் வருவதை போல, பல கலை சான்றுகளும், கல்வெட்டு சான்றுகளும் பொய்யாக இருக்கலாம். அதனால், எது "உண்மையான" தமிழ் புத்தாண்டு என்பதை அறிந்துகொள்ள நம்மிடம் தற்போதைக்கு போதிய சான்றுகள் இல்லை.