தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர் 13-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
வானிலை மையத்தின் முக்கிய எச்சரிக்கைகள்
நாளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 14 முதல் தமிழகம் முழுவதும் மழை படிப்படியாக அதிகரித்து, அக்டோபர் 15, 16 மற்றும் 17 தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.