தமிழகத்தில் நவம்பர் 7 முதல் மீண்டும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் தகவல்
செய்தி முன்னோட்டம்
தெற்கு ஆந்திரக் கரையை நோக்கி நகர்ந்த 'முரசு' தீவிரப் புயல் இன்று அதிகாலை கரையை கடக்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் வி.ஆர். துரை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 1 வரையிலான காலத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 19 செ.மீ மழையை விட, 18 சதவீதம் கூடுதலாக 22 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனமழை எச்சரிக்கை
வட மாவட்டங்களில் குறையும் மழை; நீலகிரியில் கனமழை எச்சரிக்கை
'முரசு' புயல் ஆந்திரா நோக்கி சென்றுவிட்ட நிலையில், தற்போதைய வானிலை மாற்றம் குறித்து வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை பாரிமுனையில் அதிகபட்சமாக 15 செ.மீ மழையும், மணலியில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இன்று வட மாவட்டங்களில் கனமழை ஓய்ந்து, ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தெற்கு கேரளப் பகுதியை ஒட்டி வளிமண்டலச் சுழற்சி நிலவுவதால், நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
பருவமழை
நவம்பர் 7 முதல் மீண்டும் கனமழை & பருவமழை மாற்றம்
வழக்கமாக அக்டோபரில் உருவாகும் புயல்கள் ஆந்திராவை நோக்கிச் செல்லும் என்றும், நவம்பரில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் தமிழகத்தை நோக்கி வரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறினார்.
அதன்படி, தற்போதைய மழை ஓய்ந்தாலும், வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்குப் பின் மீண்டும் கனமழை தொடங்கும்.
தென்கிழக்கு திசையிலிருந்து வீசிய காற்றால் ஏற்பட்ட இடையூறு காரணமாக வடகிழக்குப் பருவமழை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
வரும் நவம்பர் 15-க்குப் பிறகு காற்றின் திசை சீராகும் போது தமிழகத்தில் மழைப்பொழிவு பலமடங்கு அதிகரிக்கும்.
பொதுமக்கள் வானிலை மையத்தின் தினசரி எச்சரிக்கைகளை பின்பற்றித் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.