Loading...
தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
9 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2026
09:25 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் சிறிய இடைவெளிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, செவ்வாய்க்கிழமை டெல்டா மற்றும் தென் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு அந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மத்திய மேற்கு வங்கக் கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதையும், வடக்கு கேரளாவிலிருந்து கர்நாடகம் வரையிலான கடலோரப் பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நிலவுகின்றன.

இதன் தாக்கத்தால், தமிழகத்தின் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மழை வாய்ப்பு

சென்னை மற்றும் இதர மாவட்டங்களின் மழை வாய்ப்பு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இதர 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னையின் கத்திவாக்கம், சைதாப்பேட்டை, எண்ணூர், மீனம்பாக்கம், மணலி புதுநகர், கடப்பாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

வானிலை ஆய்வாளர்

தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்பு

இதற்கிடையில், கிழக்கு திசைக் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல பகுதிகளுக்குத் தேவையான மழை மீண்டும் திரும்பியுள்ளதாக தனியார் வானிலை அமைப்பான சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.

தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளில் சாதகமான காற்று குவிதல் நிலவுவதால், ஸ்ரீஹரிகோட்டா முதல் புதுச்சேரி வரையிலான சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT