அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, இன்று (பிப்ரவரி 20) மற்றும் நாளை மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், காலை நேரங்களில் லேசான மூடுபனி காணப்பட வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 22 முதல் 26 வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுவதும் வறண்ட வானிலை தொடரும் என்று வானிலை முன்னறிவிப்பு மேலும் கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2-4° செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
சென்னை
சென்னை மாநகரத்திற்கான வானிலை அறிக்கை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை வேளையில் லேசான மூடுபனி காணப்படலாம். வெப்பநிலை அதிகபட்சமாக 32-33° செல்சியஸ் அளவிற்கும், குறைந்தபட்சமாக 22-23° செல்சியஸ் அளவிற்கும் இடையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைகாலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வெப்பநிலை அதிகரித்து வருவதால், மக்கள் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.