Loading...
ஏப்ரல் முதல் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் அமல்: மீனவர்களுக்கான காப்பீட்டு தொகை உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு
வரும் ஏப்ரல் முதல் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் அமல்படுத்தப்படும் அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு

ஏப்ரல் முதல் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் அமல்: மீனவர்களுக்கான காப்பீட்டு தொகை உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 22, 2026
02:14 pm

செய்தி முன்னோட்டம்

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள 'கடல் ஆம்புலன்ஸ்' திட்டம், வரும் ஏப்ரல் மாதம் முதல் களத்தில் செயல்படுத்தப்படும் எனத் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உலக மீன்வள தின விழாவில் பங்கேற்று, சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 65 பயனாளிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை எந்த இடத்திலிருந்து முதற்கட்டமாகத் தொடங்குவது என்பது குறித்துத் தீவிரப் பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

உறுதி

மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகை உயர்வு

மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகை மட்டுமின்றி அரசின் உதவித்தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்தார்.

மேலும், ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பிற்காக உயர் அதிர்வெண் தொலைத்தொடர்பு வசதி மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி சேவைகளைப் பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மீனவக் குடும்ப மாணவர்களின் கல்விக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதுதவிர, மத்திய அரசு செயல்படுத்தும் மீனவர் நலத் திட்டங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால், மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அவற்றைத் தமிழிலும் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

விளக்கம்

காசிமேடு போராட்டத்திற்கு அமைச்சர் விளக்கம்

தூத்துக்குடி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் திட்டுகளாகத் தேங்கியுள்ள விவகாரம் குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்பக் குழுவினருடன் ஆலோசித்து அவற்றை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சென்னை காசிமேடு பகுதியில் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் சில தீய சக்திகளின் தூண்டுதலால் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மீன்வளத்துறை இயக்குநர் நாளை தலைமைச் செயலரைச் சந்தித்து ஆலோசிக்க உள்ளதால் மீனவர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT