தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் 'மிக்ஜம்' புயலாக வலுப்பெற இருப்பதால், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது. இந்த புயல் தமிழக கடலோர மாவட்டங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுவதும் போலீசார் மற்றும் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் புதுச்சேரிக்காக 18 குழுக்களை தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் வைத்துள்ளது. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் திங்கள்கிழமை விடுமுறை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள்
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை நிலைமையைக் கருத்தில் கொண்டு திங்கள்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன. தமிழக்திற்குள் மற்றும் தமிழக்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயங்கிக் கொண்டிருந்த 118 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இவை டிசம்பர் 3 முதல் 6 வரை செயல்பட இருந்த ரயில்கள் ஆகும். நிஜாமுதீன் சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், கயா சென்னை எக்ஸ்பிரஸ், பரௌனி-கோயம்புத்தூர் சிறப்பு ரயில், விஜயவாடா ஜனசதாப்தி, திருவனந்தபுரம்-புது டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாட்னா-எர்ணாகுளம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட்ரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் அதில் அடங்கும்.