வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்: வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன ஹேப்பி நியூஸ்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் தென்மேற்கு பருவமழையின் பற்றாக்குறையால் வறண்டு கிடந்த மாவட்டங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் கட்ட மழை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உற்சாகமான தகவலைப் பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள வானிலை நிலவரத்தின்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகம் மற்றும் சென்னையில் வானிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
First rains of the Northeast Monsoon from today in Chennai & Tamil Nadu
— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2026
===============================
What to expect over the next 2 weeks?
* Sudden spells of rain, followed by breaks.
* Another sudden spell of rain, with occasional heavy spells.
* Rainfall may not be… pic.twitter.com/ufB8cYLlt6
தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை தந்த ஏமாற்றம்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மாநிலம் முழுவதும் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.
போதிய மழையின்றி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தேனி மாவட்டத்தில் வைகை அணை வறண்டு வருவதால் ஐந்து மாவட்ட மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்.
வழக்கமாக செழிப்பாக இருக்கும் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இந்த முறை மழை அளவு குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத்திலும் வெயிலும் புழுக்கமும் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது தொடங்கும் வடகிழக்குப் பருவமழை தமிழகத்திற்கு மிகப்பெரிய வரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை
அடுத்த 2 வாரங்களுக்கு எப்படிப்பட்ட மழை இருக்கும்?
நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யாது. அவ்வப்போது திடீர் மழைப்பொழிவும், அதனைத் தொடர்ந்து இடைவெளிகளும் இருக்கும்.
மழையின் நேரமும், தீவிரமும் இடத்திற்கு இடம் மாறுபடும். சென்னை உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த முறை தொடரும்.
"எல்லா மழையும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடாது; நமக்கு இந்த மழை அவசியம். எனவே, வடகிழக்கு பருவமழையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்" எனக் குறிப்பிட்டுள்ள பிரதீப் ஜான், மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது குடை அல்லது மழைக்கோட்டை கட்டாயம் உடன் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.