
வட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஒரிசா - மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளுக்கு அப்பால் வடமேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்கள்
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னையைப் பொறுத்தவரை, நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மத்தியமேற்கு, தென்மேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வடக்கு வங்கக்கடலிலும் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.