துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று(நவ.,20) நடந்தது. அப்போது ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரதான பத்திரிக்கையில், கடந்த 13ம் தேதியே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையினை நீதிமன்றம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்.,12ம் தேதி இதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
10ல் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்
இதனைத்தொடர்ந்து, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் குறித்த கோப்புகளுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுள் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மசோதாவிற்கு மட்டுமே ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் நன்னடத்தை அடிப்படையில் சிறை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசிடமிருந்து 580 பரிந்துரைகள் கிடைக்கப்பெற்ற நிலையில், 362 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், 165 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 53 பரிந்துரைகள் கிடப்பில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.