மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை
செய்தி முன்னோட்டம்
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மை காலத்தில் அமலாக்கத்துறை அதிகாரி என்னும் பெயரில் தொழிலதிபர்கள் பலரை திண்டுக்கல் மாவட்டத்தில் மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து திண்டுக்கல்-மதுரை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த பக்கம் வந்த சந்தேகத்துக்கு உரிய ஒருவர் வந்த வாகனத்தினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பணத்தினை கொண்டு வந்தவர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்று தெரியவந்துள்ளது.
விசாரணை
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி
திண்டுக்கல்லில் டாக்டர் ஒருவர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கினை முடித்து வைக்க அந்த மருத்துவரிடமிருந்து இவர் ரூ.20 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.
நாக்பூர் அமலாக்கத்துறையில் பணியாற்றிவந்த அங்கித் திவாரி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் மதுரைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கித் திவாரி தற்போது கைது செய்யப்பட்டதோடு, அவரை தற்போது மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்து சென்ற தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மத்திய பாதுகாப்பு படையினர் வருகை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வருகை#SunNews | #Madurai | #ED pic.twitter.com/RI0cagudTZ
— Sun News (@sunnewstamil) December 1, 2023