ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள்
வாரணாசியின் உமராஹா பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான ஸ்வர்வேத் மகாமந்திரை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய உலகின் மிகப்பெரிய தியான மையம் இந்த ஸ்வர்வேத் மகாமந்திர். இந்த தியான மண்டபம், விஹங்கம் யோகாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கட்டப்பட்டது. விஹங்கம் யோகா, 19ஆம் நூற்றாண்டின் ஆன்மீக குருவும், ஆன்மீகக் கவிஞருமான சத்குரு சதாஃபல் தியோஜி மகராஜ் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த தியானமண்டபத்தில், அந்த ஆன்மீக குருவின் சிலையும் அமைந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான ஆன்மீகக் கட்டிடத்தைப் பற்றி சில சுவாரசிய தகவல்கள் இங்கே:
600 தொழிலாளர்கள் மற்றும் 15 பொறியாளர்களின் கூட்டு முயற்சி
இந்த தியான மண்டபம், 125 இதழ்கள் கொண்ட தாமரை குவிமாடங்கள் மற்றும் 20,000-அமரக்கூடிய திறன் கொண்ட பிரமிக்க வைக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தியான மையங்களில் ஒன்றாகும். வாரணாசி நகர மையத்தில் இருந்து தோராயமாக 12 கிமீ தொலைவில் உமரஹா பகுதியில் அமைந்துள்ள இந்த தியான மண்டபம் 3,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. மகாமந்திரின் அடித்தளம் 2004 ஆம் ஆண்டு சத்குரு ஆச்சார்யா ஸ்வந்தந்திர தேவ் மற்றும் சந்த் பிரவர் விக்யான் தேவ் ஆகியோரால் அமைக்கப்பட்டது. இந்த தியான மண்டபத்தின் கட்டுமானம் 600 தொழிலாளர்கள் மற்றும் 15 பொறியாளர்களின் கூட்டு முயற்சியால் உருவானது.
7 மாடிகள் கொண்ட தியான கூடம்
இந்தக் தியான மண்டபத்தில் 101 நீரூற்றுகள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய தேக்கு மர கூரைகள் மற்றும் கதவுகள் உள்ளன. மண்டபத்தின் ஏழு மாடி சுவர்களிலும் ஸ்வர்வேதத்தின் வசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் சுவர்கள் இளஞ்சிவப்பு மணற்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தை சுற்றிலும், மூலிகை தோட்டம் அமையப்பெற்றுள்ளது. நித்திய யோகியும், விஹங்கம் யோகாவின் நிறுவனருமான சத்குரு ஸ்ரீ சதாஃபல் தியோஜி மஹராஜ் எழுதிய ஆன்மீக உரையான 'ஸ்வார்வ்'வின் பெயரால் இந்த கோவிலுக்கு பெயரிடப்பட்டது.