பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு
பெங்களூருவில் சென்ற வாரம் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை விவகாரத்தில், கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒடிசாவில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் உடல் அருகே தற்கொலை கடிதமும் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன், பெங்களுருவில் பூட்டிய வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இந்த வழக்கில் கொலையாளி, பெங்களூருவில் இருந்து தப்பி ஓடிய முக்தி ரஞ்சன் ராய் என கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளியை நெருங்கும் முன்னர், அவர் தற்போது தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
வழக்கின் பின்னணி
29 வயதான மகாலட்சுமி என்ற பெண்ணின் உடல் 59 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் அவரது குடியிருப்பில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் செப்டம்பர் 21ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெங்களூரு வயலிகாவல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மகாலட்சுமி வசித்து வந்தார். அவர் விவாகரத்து பெற்றவர். தற்போது அவரது கொலைக்கு காரணமான முக்தி ரஞ்சன் ராய், ஒடிசாவில் பத்ரக் மாவட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குற்றம் நடந்த இடத்தில் இருந்து ஒரு பை, நோட்டுப் புத்தகம் மற்றும் ஸ்கூட்டி ஆகியவை மீட்கப்பட்டன. அந்த நோட்புக்கிற்குள் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
முக்தி ரஞ்சனின் தற்கொலை கடிதம் கூறுவது என்ன?
முக்தி ரஞ்சனின் உடலருகே கண்டெடுக்கப்பட்ட தற்கொலை கடிதத்தில், அவருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே சம்பவ தினத்தன்று பெங்களுருவில் உள்ள மஹாலக்ஷ்மியின் இல்லத்தில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதை குறிப்பிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் முக்தி, மகாலட்சுமியின் தலையில் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். அந்த கடிதத்தில், இருவருக்குமிடையிலான நெருங்கிய உறவை அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.
குற்றவாளியை எப்படி காவல்துறையினர் கண்டுபிடித்தனர்?
பெங்களூருவில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிந்த மகாலட்சுமி, ரஞ்சன் மேலாளராக பணியாற்றிய அதே கடையில் பணிபுரிந்து வந்தார். அவரது அழைப்பு பதிவுகள் ரஞ்சனுடன் அடிக்கடி தொடர்பு கொண்டது தெரியவந்தது, இது புலனாய்வாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதோடு செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து, ரஞ்சன் காணாமல் போனார், மற்றும் அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது போன்றவையே முக்தி ரஞ்சன் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. எனினும் கொலையாளியை நெருங்கும் முன்னரே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்