135 ஆண்டுகள் பழமையான மத்திய தலைமைச் செயலக நூலகப் புத்தகங்களை மாற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் உள்ள 135 ஆண்டுகள் பழமையான மத்திய தலைமை செயலக நூலகத்திலிருந்து புத்தகங்களை இடமாற்றம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவம்பர் 20-ஆம் தேதி வரை எந்தவொரு புத்தகத்தையும் நகர்த்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நூலகப் புத்தகங்களை அதிகாரிகள் கையாளும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், முறையான திட்டமிடல் இன்றி அதிகாரிகள் முடிவுகளை எடுப்பதாகக் கடுமையாக விமர்சித்தனர்.
நீதிபதிகள் காட்டம்
"புத்தகங்களுக்குச் சற்றே மரியாதை கொடுங்கள்"
விசாரணையின்போது, நீதிமன்றத்திற்கு உதவும் மூத்த வழக்கறிஞர், நவம்பர் மாதத்திற்குள் புத்தகங்களை அவசரகதியில் இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முயல்வதாகத் தெரிவித்தார்.
மேலும், சுமார் 15 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள நூலகத்தின் அசல் புத்தகங்கள் மிகவும் மோசமான நிலையில் கிடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைக்கேட்ட நீதிபதி,"இதை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள். இந்தப் புத்தகங்களை என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்? இதில் முறையான திட்டமிடல் இல்லாத அணுகுமுறையே தெரிகிறது. இது நம் நாட்டின் பாரம்பரியம் என்பதை நீங்கள் பொருட்படுத்தவே இல்லை."
"இந்தப் புத்தகங்களுக்குச் சற்றே மரியாதை கொடுங்கள்; இரண்டு லட்சம் புத்தகங்களைக் காற்றில் தூக்கி எறிந்துவிட்டீர்கள். இவை நாட்டின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி; ஏன் இவை கவனத்துடன் கையாளப்படவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு உறுதி
"நவம்பர் 20 வரை புத்தகங்கள் மாற்றப்படாது"
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, ஆர்.கே. புரத்தில் உள்ள புத்தகங்கள் துளசி சதன் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை என விளக்கமளித்தார்.
அந்தப் புத்தகங்களில் துளசி சதன் நூலகத்தின் முத்திரை உள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு வழக்கறிஞர் பத்மநாபனிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, அடுத்த விசாரணை நடைபெறும் நவம்பர் 20-ஆம் தேதி வரை புத்தகங்கள் எதுவும் இடமாற்றம் செய்யப்படாது என மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்ற ஆவணத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர்.
சென்ட்ரல் விஸ்டா
சென்ட்ரல் விஸ்டா திட்டமும், 8.5 லட்சம் புத்தகங்களின் எதிர்காலமும்
டெல்லி சாஸ்திரி பவனில் அமைந்துள்ள மத்திய தலைமைச் செயலக நூலகத்தில் சுமார் 8.5 லட்சம் புத்தகங்கள் உள்ளன.
சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சாஸ்திரி பவன் கட்டிடம் இடிக்கப்பட வாய்ப்புள்ளதால், நூலகத்தை எங்கு மாற்றுவது என்ற கேள்வி எழுந்தது.
135 ஆண்டுகால நூலகத்தின் எதிர்காலம் மற்றும் புதிய திட்டத்தில் 8.5 லட்சம் புத்தகங்களுக்கு போதிய இடவசதி இல்லாதது குறித்து கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியான செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.