சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம்
18 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் பரஸ்பர ஒப்புதலுடன் உடலுறவு கொள்வதை குற்றமற்றதாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் பதிலைக் கோரியுள்ளது. மேலும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அபாயங்களைப் புரிந்து, முடிவுகளை எடுப்பதற்கான திறன் பதின் பருவத்தினருக்கு இருக்கிறது என்று இந்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோமியோ ஜூலியட் சட்டம் என்றால் என்ன?
16 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் சம்மதத்துடன் பதின் பருவ ஆண்கள் உறவு கொள்வது தவறில்லை என்று சட்டத்தை மாற்ற வேண்டும் என்று இந்த மனுவில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள பதின் பருவ பெண்களுடன் உறவு கொள்வது தவறாகும். அந்த பெண்ணின் ஒப்புதலுடன் ஒரு பதின் பருவ ஆண் உறவு கொண்டாலும் அந்த வழக்கு பலாத்காரமாக தான் கருதப்படும். இதனையடுத்து, இந்தியாவில் "ரோமியோ ஜூலியட் சட்டத்தை' அறிமுகப்படுத்துவதன் சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது. பதின் பருவத்தினருக்கு இடையேயான வயது வித்யாசம் 4க்குள் இருந்தால், அவர்களின் உறவை அங்கீகரிக்கும் சட்டம் ரோமியோ ஜூலியட் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.