தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம்
தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த பிரச்சனையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த மனுக்களை மாற்ற பரிந்துரைத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்பதை காரணம் காட்டிய மத்திய அரசின் உயர்மட்ட வழக்கறிஞர்கள், இந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம், இந்தியாவின் குற்றவியல் சட்டங்களை மாற்றும் நோக்கத்தோடு, மூன்று புதிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
புதிய மசோதாவில் சர்ச்சைக்குரிய தேசத்துரோகச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதா?
இந்த புதிய மசோதாக்களில் இருந்து சர்ச்சைக்குரிய தேசத்துரோகச் சட்டம்(ஐபிசியின் பிரிவு 124 ஏ) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு பதிலாக, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்(சட்டப்பிரிவு 150) என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், 'தேசத்துரோகச் சட்டம்' என்ற பெயர் மட்டும் தான் புதிய மசோதாவில் மாற்றப்பட்டுள்ளது என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் பேசினாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டப்பிரிவு 150 கூறுகிறது.