சட்டம் பேசுவோம்: தேசத்துரோக சட்டம் என்றால் என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?
சட்டம் பேசுவோம்: தேசத் துரோகச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் விசாரிக்க உள்ளது. சமீபத்தில், புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களவையில் 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. 1860ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்திற்கு(IPC) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா(BNS) என்ற சட்டத்தை இந்திய அரசு முன்மொழிந்தது. மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு(CrPC) மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023 என்ற மசோதாவும், இந்திய சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய சாக்ஷ்ய-2023 என்ற மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனிடையே தற்போது தேசத் துரோகச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
தேசத்துரோக சட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சட்டப்பிரிவு 150
தேசத் துரோகம் என்பதை வரையறுக்கும் விதிகள் IPCயின் சட்டப்பிரிவு 124Aவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மே 2022இல் உச்ச நீதிமன்ற வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து இந்த தேசத்துரோக சட்டத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. தேசத்துரோகச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அப்போது அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியது. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி IPCக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா(BNS) என்ற சட்ட மசோதாவை இந்திய அரசு நாடுளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், இந்த புதிய மசோதாவிலும் தேசத்துரோக சட்டத்தை ஒத்த சட்டப்பிரிவு 150 என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் பேசினாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டப்பிரிவு-150 கூறுகிறது.
தேசத்துரோக சட்டம் என்றால் என்ன?
தேசத்துரோகச் சட்டம் முதன்முதலில் 1837ஆம் ஆண்டில் தாமஸ் மெக்காலே என்பவரால் உருவாக்கப்பட்டது. மேலும், 1870ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஸ்டீபன் என்பவர் தேசத்துரோகச் சட்டத்தை இந்திய தண்டனைச் சட்டத்தின்(IPC) பிரிவு 124Aஇல் சேர்த்தார். இந்தியாவுக்கோ அல்லது இந்திய அரசாங்கத்திற்கோ எதிராக என்ன செய்தாலும் அது தேசத்துரோகமாக கருதப்படும். பிரிட்டன் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர வீரர்கள் கொதித்தெழுந்து புரட்சி செய்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் தேசத்துரோகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மகாத்மா காந்தி, அன்னி பெசன்ட் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காகவே இந்த சட்டம் இயற்றப்பட்டது. IPCயின் சட்டப்பிரிவு 124Aயின் படி, "தேசத்துரோகம்" செய்தவர்களால் ஜாமீனில் வெளிவர முடியாது. தேசத்துரோகச் சட்டத்தை மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, சில சமயங்களில் அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படலாம்.
தேசத்துரோக சட்டத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?
"தேசத்துரோக" குற்றவாளி அரசு வேலையில் இருந்தால், அவரது அரசாங்க வேலை பறிக்கப்படும். மேலும், அவர் பாஸ்போர்ட் இல்லாமல் வாழ வேண்டி இருக்கும். மொத்தத்தில், இந்த சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டால் அந்த நபரால் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வாழ முடியாது. தேசத்துரோகச் சட்டத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் இதுவரை எழுந்துள்ளன. இது காலனித்துவ சட்டம் என்பதாலும், இது இந்தியர்களிடையே ஏற்பட்ட எழுச்சியை ஒடுக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது என்பதாலும் பல சட்ட ஆர்வலர்கள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர். எனினும், ஒரு சட்டத்தை ரத்து செய்வதற்கு இது சரியான காரணம் இல்லை என்று முன்பு சட்ட ஆணையம் தீர்ப்பளித்தது. தேசத்துரோக சட்டம், தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பாதுகாக்கிறது என்றும் சட்ட ஆணையம் கூறியது.
கருத்து வேறுபாடு என்ற சாக்குப்போக்கின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்கள்
ஆனால், மக்களாட்சியில் அரசாங்கத்தின் குரலை விட மக்களின் குரல் தான் ஓங்கி இருக்க வேண்டும் என்கின்றனர் விமர்சகர்கள். அரசாங்கத்திற்கு எதிராக எது பேசினாலும் செய்தாலும் அது தேசத்துரோகமாக கருத்தப்பட்டால் அது பொது மக்களின் கருத்து சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்றால் அது மக்களாட்சியாக இல்லாமல் சர்வாதிகாரமாக மாறிவிடும். மேலும், தேசத்துரோகச் சட்டத்தை எளிதில் தவறாகப் பயன்படுத்த முடியும். கருத்து வேறுபாடு என்ற சாக்குப்போக்கின் கீழ் மக்கள் கைது செய்யப்படலாம். எடுத்துக்காட்டாக, 2021ஆம் ஆண்டில், கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்றதைக் கொண்டாடியதற்காக மூன்று காஷ்மீரி முஸ்லிம் சிறுமிகள் தேசத்துரோக வழக்கில் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.