திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு; கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்கவும் ஆணை
செய்தி முன்னோட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நிறைவேற்றாதது குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்கவும் ஆணையிட்டுள்ளனர்.
காட்டம்
எந்த அதிகாரத்திற்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது: நீதிபதிகள் காட்டம்
கடந்த நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றப்படவில்லை எனக்கூறி 3 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாகத் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படும்போது பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்றும், இத்தகைய போக்கு அரசியலமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்பதால் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியுள்ளது என்றும் எச்சரித்தனர்.
எந்தவொரு அதிகாரத்திற்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது எனக்குறிப்பிட்ட அமர்வு, அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்திற்கு துணைநின்று செயல்பட வேண்டும் எனத் தெளிவுபடுத்தியது.
நிர்வாகக் குழு
நாளை தீபமேற்ற உத்தரவு மற்றும் புதிய நிர்வாகக் குழு நியமனம்
தீர்ப்பை செயல்படுத்தாததற்கான பழியை கோயில் நிர்வாகத்தின் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் சுமத்த முயற்சிப்பதாகச் சாடினர்.
மேலும், ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முதல்நிலை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி அதனை நிராகரித்தனர்.
"நாளை திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடரை எடுத்துச் சென்று, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இந்நிகழ்வில் பங்கேற்கப் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது".
திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு உடனடியாகக் கலைக்கப்படுவதாகவும், மறுஉத்தரவு வரும் வரை அறங்காவலர் குழு செயல்படக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு நோட்டீஸ்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் முதற்கட்ட ஆவணங்களின் அடிப்படையில் தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் நேரில் ஆஜராகி விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், தமிழக காவல்துறைத் தலைவர் (DGP), இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.