போராட்டம் நடத்த நிரந்தரமாக இடத்தை ஆக்கிரமிக்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
செய்தி முன்னோட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்கள் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், "போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை எந்தவொரு அமைப்பும் காலவரையின்றி/நிரந்தரமாக ஆக்கிரமித்து வைத்திருக்க முடியாது" என தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு, போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களுக்கு குறிப்பிட்ட கால வரம்பு மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உரிமை
"போராடும் உரிமையைப் போல வாழ்வாதாரமும் முக்கியம்"
விசாரணையின் போது தலைமை நீதிபதி சூரிய காந்த்,"ஒரு குறிப்பிட்ட அமைப்பே போராட்டக் களத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டால், விவசாயிகள், தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பிற அமைப்பினர் எங்கே செல்வார்கள்? அரசமைப்புச் சட்டப்படி அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமையுள்ளது" எனச் சுட்டிக்காட்டினார்.
"வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. அவர்களின் வாழ்வாதார உரிமையையும் கணக்கில் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
வாதம்
"நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முடியாது"
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,"ஜூலை 20 அன்று ஒரு நாள் போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அமைப்பாளர்கள் ஜந்தர் மந்தரைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக்கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்".
"போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பவர்களே அதன் விளைவுகளுக்குப் முழுப் பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த யாருக்கும் அனுமதியில்லை" எனக் கடுமையாக வாதிட்டார்.
டெல்லி வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பண்டிகைக் காலத்தில் ஜந்தர் மந்தர் மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் தொடர் போராட்டங்களால் கடைகள் அடைக்கப்பட்டு சுமார் ரூ. 2,000 கோடி அளவிற்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.