கொல்கத்தா மருத்துவர் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுரை
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதற்கு பதிலாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற உத்தரவிட்டது. மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து சிபிஐ மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த கட்டத்தில் புதிய சிபிஐ விசாரணைக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் கருணா நுண்டி, சிபிஐ சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
தண்டனை
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கு பரவலான பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரியும், காவல்துறையின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் கொல்கத்தாவில் இரண்டு பேரணிகள் நடத்தப்பட்டன.
குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த கொடூரமான குற்றத்திற்காக நீதிமன்றம் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மேலும் பலர் இதில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டி, மேலும் விசாரணையை கோருகின்றனர்.
32 வயதான மருத்து மாணவி ஆகஸ்ட் 9, 2024 அன்று மருத்துவமனை வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கொல்கத்தா காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.