Loading...
பாக்கெட் உணவுகளில் 'அதிக சர்க்கரை, கொழுப்பு, உப்பு' எச்சரிக்கை சின்னம் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
அறுகோண வடிவ எச்சரிக்கை சின்னங்களை கட்டாயமாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாக்கெட் உணவுகளில் 'அதிக சர்க்கரை, கொழுப்பு, உப்பு' எச்சரிக்கை சின்னம் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
01:16 pm

செய்தி முன்னோட்டம்

பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களின் முன்பக்கத்தில் 'அதிக கொழுப்பு', 'அதிக சர்க்கரை' அல்லது 'அதிக உப்பு' ஆகியவற்றைக் குறிக்கும் தனித்தனி அறுகோண வடிவ எச்சரிக்கை சின்னங்களை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் FSSAI-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. '3S அண்ட் அவர் ஹெல்த் சொசைட்டி' என்ற அமைப்பு தாக்கல் செய்த பொதுநல வழக்கில், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழிகாட்டுதல்கள்

தனித்தனி அறுகோண எச்சரிக்கை சின்னங்களுக்கான வழிகாட்டுதல்கள்

உணவுப் பொட்டலங்களின் முன்பக்க ஊட்டச்சத்து லேபிளிங் நடைமுறையை அமல்படுத்துவது குறித்துத் தெளிவான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதன்படி, தீங்கு விளைவிக்கும் ஊட்டச்சத்துகள் அனைத்தையும் ஒரே சின்னத்தில் இணைக்காமல், அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் அதிக உப்பு ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அறுகோண வடிவ எச்சரிக்கை சின்னங்கள் அச்சிடப்பட வேண்டும்.

சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப, உணவுப் பொட்டலத்தின் முதன்மை முகப்புப் பகுதியின் அளவில் 4 முதல் 5 சதவீதம் வரை இந்தச் சின்னங்கள் இடம்பெற வேண்டும் என்றும், சாதாரணச் சூழ்நிலையிலும் நுகர்வோர் தெளிவாகப் படிக்கும் வகையில் எழுத்துருக்களின் அளவு இருக்க வேண்டும் என்றும் FSSAI அமைப்பிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

பள்ளிப் பாடத்திட்டங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2020-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பள்ளிப் பாடத்திட்டங்களில் ஊட்டச்சத்துக் கல்வியை இணைக்கவும், இது தொடர்பான பயிலரங்குகள் மற்றும் செயல்முறைப் பயிற்சிகளை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

கேள்வி

நீதிமன்றத்தின் காட்டமான கேள்வி

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின் போது, அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளுக்கு எச்சரிக்கை லேபிள் ஒட்டும் விவகாரத்தில் FSSAI அமைப்பின் அணுகுமுறையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.

சர்வதேசத் தரத்திலான எச்சரிக்கை சின்னங்களைப் பின்பற்றுவதற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், உடல் பருமன் ஒரு மிகப்பெரிய பொது சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தியா மட்டும் இதில் பின்தங்கியே இருக்க வேண்டுமா எனக்கேள்வி எழுப்பியது.

உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, முதற்கட்டமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தீங்கு விளைவிக்கும் ஊட்டச்சத்துகளைக் கொண்ட உணவுப் பொருட்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஏதேனும் ஒரு சத்து அதிகமாக உள்ள பொருட்களுக்கும் எச்சரிக்கை லேபிள் வழங்கும் இரு-கட்ட நடைமுறையை எஃப்எஸ்எஸ்ஏஐ முன்மொழிந்தது.

ADVERTISEMENT