Loading...
'நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை': படிவம் 6 சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் வாதத்தை மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
படிவம் 6 சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் வாதத்தை மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

'நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை': படிவம் 6 சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் வாதத்தை மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
05:27 pm

செய்தி முன்னோட்டம்

புதிய வாக்காளர் பதிவுக்காக பயன்படுத்தப்படும் படிவம் 6-ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உச்சநீதிமன்றம் எவ்வித ஒப்புதலும் அளிக்கவில்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞாணேஷ் குமார் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) செயல்பாடுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அமர்வில் தலைமை நீதிபதி சூர்யா காந்த் கூறுகையில், "மாற்றப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார். சிறப்பு தீவிர திருத்த பணிகளின் (SIR) போது, படிவம் 6-ல் மாற்றங்களை செய்தது யார் என்பதைக் கண்டறிய தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஆவணங்களை உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

பின்னணி

தேர்தல் ஆணையத்தின் வாதமும் பின்னணியும்

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் தங்களையோ அல்லது தங்கள் மூதாதையர்களையோ முந்தைய வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என்ற கூடுதல் இணைப்பை தேர்தல் ஆணையம் சேர்த்திருந்தது.

இது படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றம் அல்ல, கூடுதல் சுயபிரகடனம் மட்டுமே என்றும், இதற்கு உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 அன்று ஒப்புதல் அளித்து உறுதி செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த வாதத்தை முற்றிலுமாக மறுத்த உச்சநீதிமன்றம், படிவம் 6-ல் திருத்தம் மேற்கொள்ள யார் உத்தரவிட்டது என்பது பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகள்

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள்

ஆன்லைன் மூலமான படிவம் 6-ல் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிர்ப்பு தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என கடந்த மே 27 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT